பதிவு:2022-10-12 12:50:44
திருவள்ளூரில் உள்ள வீடில்லாதோர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு புத்தாடைகள் : எம்.எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்
திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வரதராஜநகரில் வீடில்லாதோர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகராட்சி சார்பாக பேர்ட்ஸ் நெஸ்ட் சேவை அறக்கட்டளை நிர்வாகத்தினர்விடுதியை பராமரித்து வருகின்றனர். இந்த விடுதியில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்த பெண்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் இல்லாத ஆண்கள் என 50 வயதிற்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்படுகின்றனர்.
அதன்படி ஆண், பெண் என 30 பேர் இந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கேயே படுத்து தூங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் அறக்கட்டளையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி மற்றும் பேர்ட்ஸ் நெஸ்ட் சேவை அறக்கட்டளையின் சார்பில் உலக வீடில்லாதோர் தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தராஜூ அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் எட்வின் செல்வபாபு ஆகியோர் வரவேற்றனர்.
இதி்ல் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த விடுதியில் தங்கியுள்ள 30 பேருக்கும் வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அசைவ உணவையும் பரிமாறினார். அதனையடுத்து வீடு தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ சோதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியில் விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளையும் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட திமுக அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், முன்னாள் நகர்மன்றத் தலவைர் பொன்.பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்அலி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.