பதிவு:2022-10-12 14:22:54
திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு பலத்த காயம் : திருத்தணி போலீசார் விசாரணை
திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி. இந்த கல்லூரியில் 3000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் வந்ததும் மாணவர்கள் கலைந்து ஓடி மறைந்தனர்.இந்த மோதலில் 4 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கிடையேயான மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ரேகிங் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையால் இந்த மோதலா என்பது குறித்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் கல்லூரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.