பதிவு:2022-10-12 15:35:32
திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் 58 ரவுடிகளும், ஆவடி காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள 119 ரவுடிகளும் கைது : தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் நடவடிக்கை
திருவள்ளூர் அக் 12 : தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்பி.,பா.சிபாஸ் கல்யாண் தலைமையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியல் தயார் செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் ரவுடிகளின் பட்டியலை போலீஸ் நிலையங்கள் வாரியாக போலீசார் தயாரித்தனர். அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 58 பேரை கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்டவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர் படுத்தி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதிமொழியை மீறினால், உடனடியாக கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.
அதே போல் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட ஆவடி மாவட்டம் மற்றும் செங்குன்றம் மாவட்டங்களில் இயங்கி வரும் 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், சொற்பகாயம், கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், அவர்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளவும், ரவுடி வேட்டை நடத்தப்பட வேண்டும் என்ற டிஐஜி சைலேந்திரபாபுவின் ஆணைக்கிணங்க, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ரவுடி வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரவுடி வேட்டையில், இது வரை கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம் மற்றும் சொற்பகாயம் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 104 ரவுடிகள், கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 15 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள குற்றவாளிகளில் 11 நபர்களை கைது செய்தும், 6 நபர்கள் மீதிருந்த நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றியும் 87 ரவுடிகள் மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது சட்ட விதிகளின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.