திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் "குழந்தை திருமணம் தடுப்பு “ குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பிரச்சாரம்

பதிவு:2022-10-12 15:59:08



திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் "குழந்தை திருமணம் தடுப்பு “ குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பிரச்சாரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம்  சார்பில்

திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூரில் 35 ஆண்டுகளாக சமூக பணி செய்து கொண்டிருக்கும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், பூண்டி ஒன்றியத்தில் கல்வியை மையமாக கொண்ட சமுதாய வளர்ச்சி திட்டத்தினை சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் அரசுத்துறைகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல், உயர் கல்வியின் அவசியம், பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழித்தல், பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு பயிற்சிகள் சிறுவர், சிறுமியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அளித்து வருகிறது.

இந்நிலையில் சர்வதேச பெண்குழந்தை தினத்தை முன்னிட்டு ‘குழந்தை திருமணம் தடுப்பு” குறித்து பெற்றோர்களிடமும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கையெழுத்து இயக்க பிரச்சாரத்தை துவக்கியது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மகளிர் நலன் மற்றும் உரிமை மேம்பாட்டுத்துறை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் பிருந்தாவனம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான கூட்டமைப்பும் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை குறிப்பாக பெற்றோர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி, ‘குழந்தை திருமணம் இல்லாத சமுதாயத்தை” உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதியேற்பு கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து இயக்கத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட ஆட்சியரகத்தில் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அடுத்ததாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் மல்லிகா ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

இதில் சிறுவர் குழுக்களின் பிரதிநிதிகளான திலோத்தம்மா, பூஜா, பூங்கொடி மற்றும் பிருந்தாவனம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் நிர்வாகிகள் நதியா மற்றும் மோகனா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், திட்ட மேலாளர் விஜயன், கள ஒருங்கிணைப்பாளர்கள் பழனி மற்றும் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.