பதிவு:2022-10-18 07:57:29
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்கசென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் அக் 17 : திருவள்ளூர் அடுத்த மணவூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் நிரஞ்சன் (17) பாண்டியன் மகன் கோகுல் (15) இருவரும் திருவாலங்காடு ஊராட்சிக்குட்பட்ட குப்பம்மா கண்டிகை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் இருந்து வரும் நீர் கேசாவரம் அணையிலிருந்து பிரிந்து வரும் நீராலும் கொசஸ்தலை ஆற்றில் நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நிரஞ்சன் மற்றும் கோகுல் ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் குளித்துக் கொண்டிருந்த போது , திடீரென ஆழமான பள்ளம் அருகே சென்ற போது இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து கிராம இளைஞர்கள் ஆற்றில் குதித்து நிரஞ்சன் உடலை மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோகுல் என்ற சிறுவனின் உடலையும் மீட்டனர்.திருவாலங்காடு போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது