பதிவு:2022-10-18 14:45:33
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 78 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 33 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 82 மனுக்களும்; என மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியில் 100 சதவிகிதம் பூர்த்தி செய்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளுர், பூவிருந்தவல்லி மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பணியை பாராட்டி அவ்வலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கூட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்தபோது பணியிடையில் காலமான 2 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் ஒரு சத்துணவு அமைப்பாளர் பணியிடம் மற்றும் ஒரு சமையலர் பணியிடம் என 2 பணியிடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் புரிவதற்காக ஒரு மாற்றுத்திறனாளிக்கு மானிய தொகையாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான ஆணையினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் வட்டாரத்தில் உள்ள மகளிர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட மீஞ்சூர் மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு துவக்க மானியமாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலையைஅந்நிறுவன மகளிர் பிரதிநிதிகளிடம் ஆட்சியர் வழங்கினார்.மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் புதிய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட உள்ள மாவட்ட புத்தாக்க மையத்திற்கான புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் ரிஷப்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சி.வித்யா (பொது), ஆர்.ஸ்ரீதர் (சத்துணவு), தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயலாக்க அலுவலர் ஜே.மணிவண்ணன், மாவட்ட புத்தாக்க அலுவலர் வினோத்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சு.உதயம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.