பதிவு:2022-04-08 11:09:28
திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழா : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் :
திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 7-ஆம் நாளில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இளைஞர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என சுமார் 6000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து சுமார் ரூ.8 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களை திறன்மிகு அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்ய “ஸ்மார்ட் அங்கன்வாடி மையம்” என்ற பெயரில் இலட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், வாசகர்கள் என சுமார் 6000-த்திற்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் திரளாக வருகை புரிந்து கண்டு களித்தனர். மேலும், 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெறும் பல்துறை பணிவிளக்க புகைப்படக் கண்காட்சியின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கண்டு களித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள முல்லை தோட்டம், மேல்மணம்பேடு, அனைக்கட்டுசேரி மற்றும் சொக்கநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் தனி வகுப்பு அறை, தனி சமையலறை, பசுமைத்தோட்டம் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம் பெற்றுள்ள திறன்மிகு அங்கன்வாடிகளின் புகைப்படங்களை ஆட்சியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களோடு பார்வையிட்டார்.
மேலும் “இலக்கியங்களில் மனித நேயம்;” என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் திண்டுக்கல் ஐ.லியோனி கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, “நதிபோல் ஓடிக்கொண்டிரு” என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா கருத்துரை வழங்கினார். மேலும், “வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் பேச்சாளர் கண்மணி குணசேகரன் கருத்துரை வழங்கி, அனைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதுநாள் வரை சுமார் 40,000 நபர்கள் கலந்து கொண்டு, அரங்குகளை பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ.68 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டு, மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக 5000 அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 20 மதிப்புள்ள இலவச புத்தகம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக புத்தகத்திற்கான டோக்கன்களையும்,தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில பொது செயலாளரும்,ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் வழங்கினார்.
இதில் திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி,ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா,வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.