பதிவு:2022-10-19 15:17:31
திருத்தணி அடுத்த ராஜாநகரம் பகுதியில் அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்ட மற்று சமூகத்தினர் தடுப்பதால் தங்களை கருணை கொலை செய்துவிடக் கோரி ஆதி திராவிட மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு :
திருவள்ளூர் அக் 19 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், ராஜா நகரம் பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.அம்மனைகளை மாற்று சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறி மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீண்ட காலமாக அரசு அதிகாரிகள் நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 2- ந் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர், ஆதிதிராவிட துறையினர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு பயனாளிகள் விவரம் அடங்கிய பட்டியலும் கொடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த ஜூன் 23-ந் தேதி அன்று அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் அத்தகைய நிலம் அளவீடு செய்யப்பட்டு போடப்பட்டிருந்த கற்களை பிடுங்கி எரிந்து ரகளையில் ஈடுப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அன்றைய நாள் முதல் அப்பகுதியில் சாதிய மோதல் உருவாக கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.இதனால் ஊர் கட்டுப்பாடு என கூறி ஆதிதிராவிட மக்களுக்கு மளிகைக் கடைகள், மருந்தகங்கள் போன்ற கடைகளில் பொருட்கள் அளிக்க கூடாது என மாற்று சமூகத்தினர் ஒன்று கூடிதடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ராஜா நகரம் ஆதிதிராவிட மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்தித்து தங்களுக்கு அரசு சார்பில் 100 நபர்களுக்கு வீட்டு மனை நிலம் கொடுத்து 27 ஆண்டுகள் கடந்தும் தங்கள் அத்தகைய நிலத்தில் வீடு கட்டி வாழ முடியாத நிலை இருந்து வருகிறது.
அதனால் தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வருகின்ற 26 ஆம் தேதிக்கு பிறகு அதற்கான தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளித்ததாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.இல்லையென்றால் வருகின்ற 31ஆம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி முதல்வரை சந்தித்து, 100 நாள் வேலை அங்கன்வாடி, பள்ளிகள் புறக்கணித்தும், ஆதார் அட்டை வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா போன்ற அரசு ஆவணங்கள் அனைத்தும் முதல்வர் கையில் கொடுத்து ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.