ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை சார்ந்த பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

பதிவு:2022-10-27 13:05:23



ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை சார்ந்த பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை சார்ந்த பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

திருவள்ளூர் அக் 27 : திருவள்ளூர் மாவட்டம்,ஆவடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

முன்னதாக, வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சி, பருத்திப்பட்டு பஜனை கோயில் தெரு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை இருபுறமும் சுமார் 5200 மீட்டர் அளவிற்கு ரூ.27.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, அப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை சார்பாக கடந்த செப்டம்பர் 20-ம் நாள் முதல் நடைபெற்று வரும் பருத்திப்பட்டு முதல் அயப்பாக்கம் வரையிலான சுமார் 2500 மீட்டர் அளவிற்கு ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அக்கால்வாயை உபயோகத்திற்கு கொண்டு வருதல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சி, மிட்னமல்லி ஏரிக்கரையின் மீது சுமார் 1350 மீட்டர் அளவிற்கு புதியதாக சாலை அமைத்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அச்சாலை மூலமாக எளிதாக போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவது குறித்தும் பால்வளத் துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி மக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் தர்பகராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஏ.எஸ்.விஸ்வநாதன், பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன், ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.