பதிவு:2022-04-08 11:20:21
ரயிலில் உட்கார இடம் தராததால் உடன் பயணித்த வரை கொலை செய்த வழக்கில் சி.ஆர்.பி.எப் காவலருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு :
திருவள்ளூர் ஏப் 09 : அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் தலைமை காவலர் அத்தூல் சந்திர தாஸ் கடந்த 1996-ல் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கூப்பிட்டான் பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் உட்கார இருக்கை கேட்டுள்ளனர். அதற்கு ராஜா இருக்கை தராததால் 2 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஸாம் மாநில தலைமை காவலர் அத்தூல் சந்திர தாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜா என்பவரை சுட்டு கொன்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 14.07.1996 ஆம் தேதி அத்தூல் சந்திர தாஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே விடப்பட்டார்.
இந்த வழக்கை கடந்த 2002 ஆம் ஆண்டு கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில் அப்துல் சந்திரதாஸ் நீதிமன்ற வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் அவர் மீது 2002 ஆம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது. இதையொட்டி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் பதுங்கியிருந்த அத்தூல் சந்திர தாஸை கைது செய்து சட்டரீதியாக அழைத்து வந்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் 2 முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்ட தீர்ப்பாக சிஆர்பிஎப் காவலர் அத்தூல் சந்திர தாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்பளிக்கப்பட்டது..தீர்ப்புக்குப் பின் சிஆர்பிஎப் காவலர் அத்தூல் சந்திர தாஸ் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.