பதிவு:2022-10-31 11:22:53
திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி : திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் பங்கேற்பு :
திருவள்ளூர் அக் 29 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 14ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரி நுழைவு வாயிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து நடைபெறும் மோதல் சம்பவங்களை தடுக்க திருத்தணி வருவாய் ஆர்டிஓ ஹஸ்ரத்பேகம், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பதிவேடுகளை கல்லூரி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.3 முறைக்கு மேல் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க கல்லூரியில் புதியதாக ஒழுங்கு நடவடிக்கை குழு கல்லூரியின் முதல்வர் தலைமையில் அமைக்கப்படும்.
மாதந்தோறும் கல்லூரியில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் எனவும், மாணவர்களாகிய நீங்கள் பிரிவினையை அகற்றி ஒற்றுமையோடு இருந்து நன்கு பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். கல்லூரி வளாகத்தில் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி விக்னேஷ் எச்சரித்தார்.