பதிவு:2022-11-01 16:25:21
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 6702 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர் நவ 01 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கூடி இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 797 மில்லியன் கன அடி நீர் இருப்பும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக 50 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் மெட்ரோ குடிநீருக்காக 50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2536 மில்லியன் கன அடி நீர் உள்ளது நீர்வரத்து 967 கன அடியாகவும் சென்னை மக்களுக்காக 192 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 194 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர்வரத்தாக 66 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இப்போது 2675 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மழை நீர் என 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக ஏரிகளில் உள்ள நீர் இருப்பு கூடியிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் -----
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 600 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 40 மில்லி மீ.ட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூரல் மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது.
இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு: அதிகபட்சமாக செங்குன்றத்தில் 127 மில்லி மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 102 மில்லி மீட்டர் மழையும் , பொன்னேரியில் 99 மில்லி மீட்டர் மழையும் , சோழவரத்தில் 79 மில்லி மீட்டர் மழையும் , ஆவடியில் 46 மில்லி மீட்டர் மழையும் . தாமரைப்பாக்கத்தில் 44 மில்லி மீட்டர் மழையும், ஊத்துக்கோட்டையில் 43 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அதே போல் பூவிருந்தவல்லியில் 32 மில்லி மீட்டர் மழையும் , பூண்டியில் 13 மில்லி மீட்டர் மழையும் , குறைந்தபட்சமாக ஜமீன்கொரட்டூரில் 9 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 600 மி.மீ, மழையும், சராசரியாக 40 மில்லி மீட்டர் மழையம் பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.