பதிவு:2022-11-01 16:32:43
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் நவ 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 66 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 34 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 61 மனுக்களும் என மொத்தம் 228 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தலா ரூ.2000 வழங்குவதற்கான ஆணையினையும்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் கல்வியாண்டில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தொடக்கநிலை, நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை முழுமையாக பெறுவதற்கு ரூ.8.05 இலட்சம் மதிப்பீட்டிலான சக்கர நாற்காலி, முடநீக்கியல் நாற்காலி, முடநீக்கியல் கருவிகள், காதொலி கருவிகள், ஊன்றுகோல், முழங்கை ஊன்றுகோல், உணர்வு திறன் உபகரணப்பை உள்ளிட்ட உதவி உபகரணங்களை 284 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் பிறந்த தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமை நாள் அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, ஊழலை ஒழித்து தேசத்தினை உயர்த்துவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை கொண்டாடப்படும் ஊழல் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்; ஊழல் எதிர்ப்பு
உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ச.கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, அலுவலக மேலாளர் டி.மீனா (நீதியியல்) மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.