பூண்டி கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வலியுறுத்தல்

பதிவு:2022-04-09 15:26:01



மனிதன் தோன்றிய பகுதியான பூண்டி கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வலியுறுத்தல் :

பூண்டி கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்  மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வலியுறுத்தல்

திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 1 ம் தேதி முதல் முதலாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆர்வமுடன் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு டிஎன்பிஎஸ்சி பொதுத் தேர்வு, ஐஏஎஸ்., ஐபிஎஸ், தேர்வு புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி மகிழ்ந்தனர். அதே போல் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் புத்தகக் கணகாட்சியை பார்வையிட்டார்.

அப்போது தமிழ் எழுத்துக்கள் 247 அடிப்படையாக கொண்டு தஞ்சாவூர் கோயில் தமிழ் முறைப்படி கட்டி முடிக்கப்பட்டதை விவரமாக எடுத்துக் கூறி அசத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இரா.தாஸ், மனிதர்கள் தோன்றிய இடமாக கருதப்படும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் உள்ள கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும், பட்டரைப் பெரும்புதூரில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியை தொடர நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கினார்.