திருவள்ளூரில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் துரித காசநோய் கண்டுபிடிப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

பதிவு:2022-11-01 16:37:36



திருவள்ளூரில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் துரித காசநோய் கண்டுபிடிப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

திருவள்ளூரில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் துரித காசநோய் கண்டுபிடிப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு

திருவள்ளூர் நவ 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் கண்டுபிடிப்பதற்காக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நடத்தப்பட்ட துரித காசநோய் கண்டுபிடிப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் “காசநோய் இல்லா தமிழகம் 2025” என்ற இலக்கினை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நம் திருவள்ளுர் மாவட்டத்தில் 11.07.2022 முதல் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று காசநோய் அறிகுறிகள் உள்ள பொதுமக்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை காசநோய் அறிகுறிகள் உள்ள 3088 நபர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளிபரிசோதனை செய்யப்பட்டதில் 34 நபர்களுக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவர்கள் காசநோய்க்காக சிகிச்சை எடுக்கும் காலங்களுக்கு ஊட்டச்சத்திற்காக அரசு இலவசமாக வழங்கும் உதவித்தொகையான ரூ.500 மாதந்தோறும் அவர்கள் வங்கிக்கணக்கில் பண பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், கிருமி தொற்று உள்ள காசநோயாளிகளின் உடன் வசிப்போர்களுக்கு (5 வயதிற்கு மேற்பட்ட நபர்கள்) இரத்த மாதிரி பரிசோதனை மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை 1219 நபர்களுக்கு பரிசோதிக்கப்பட்டதில் 531 நபர்களுக்கு உள்ளுறை காசநோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் காசநோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

முகாமில், துணை இயக்குனர் (காசநோய்) லட்சுமி முரளி, மாவட்ட நலக்கல்வியாளர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (காசநோய்) வெங்கடேசன், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து

கொண்டனர்.