பதிவு:2022-11-02 11:20:13
திருவள்ளூரில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்
திருவள்ளூர் நவ 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து, பார்வையிட்டு, சிறப்பாக பணிபுரிந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, இன்று 526 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களான ஊராட்சி செயலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில் சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் வருகை புரிந்து கண்டுகளித்தனர்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.