பதிவு:2022-11-07 08:35:06
திருவள்ளூர் அருகே 2 வது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குடுகுடுப்பைக்காரன் கைது
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவன் விசு ராவ்(28). குடுகுடுப்பை தொழில் செய்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
குடுகுடுப்பை தொழில் செய்து வரும் இன மக்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு கட்டுப்பாடு என்பதே கிடையாது என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மனைவி மாலதி இருக்கும் போதே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டிபாய் என்ற உறவுக்கார பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளான்.
விசுராவ் ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் 2-வது மனைவி வேண்டிபாய் ராமாபுரம் பகுதியில் உள்ள கோயில் அருகே சுருக்குப் பை விற்பனை செய்யும் தொழி்ல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் 4 நாட்கள் வேண்டிபாய் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு வராமல் அதே பகுதியில் உறவினரின் வீட்டிற்கு சென்று தூங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 1-ந் தேதி 2-வது மனைவி வேண்டிபாயை வீட்டிற்கு வராமல் ஏன் வேறொருவர் வீட்டில் படுக்க சென்றாய் எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேண்டிபாய் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேண்டாபாயின் தந்தை சாமுராஜ் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசுராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.