பதிவு:2022-11-07 12:31:55
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் "தங்க மங்கை " மனிஷா ராமதாஸ் உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியன்
திருவள்ளூர் நவ 07 : உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று உலக சாம்பியனாக வலம் வரும் தமிழகத்தைச் சார்ந்த திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் "இந்தியாவின் தங்க மங்கை " மனிஷா ராமதாசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி "தங்க மங்கை யாக வலம் வருவது" இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.ஜப்பானில் நடைபெற்ற இப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ் ஜப்பானின் "மமிகோ டொயோடா" வை 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு வெண்கலத்தைப் பெற்று தந்துள்ளார்.
தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருவதன் மூலம் மனிஷா ராமதாஸ், SU3 மற்றும் SU5 WS உலக தரவரிசையில் சாம்பியனாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மனிஷா தனது ஒரு வருட சர்வதேச வாழ்க்கையில் ஸ்பெயின், பிரேசில், பஹ்ரைன்,துபாய்,கனடா, ஜப்பான் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து, 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளியின் துணையுடன் வளர்ந்து வரும் பாரா பேட்மிண்டன் "தங்க மகள்" மனிஷா ராமதாஸ் இந்திய தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், திருவள்ளூர் நகருக்கும் பெருமதிப்பையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளார் என பள்ளி நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.