திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 வயது சிறுவனை சாரைப் பாம்பு கடித்ததால் பரபரப்பு

பதிவு:2022-11-09 08:35:13



திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 வயது சிறுவனை சாரைப் பாம்பு கடித்ததால் பரபரப்பு

திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 வயது சிறுவனை சாரைப் பாம்பு கடித்ததால் பரபரப்பு

திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அடுத்த அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (30). இவர் வசிக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று இடம் கேட்டு நேற்று அஜீத்குமார் திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 வயது குழந்தை பிரவீன் குமாருடன் வந்துள்ளார்.

சார் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அலுவலக வாசலில் காத்திருந்த அஜீத்குமாரின் 3 வயது குழந்தை அலுவலக வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது புதரில் இருந்து வந்த சாரைப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத்குமார் குழந்தையை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பாம்பு கடித்தது குறித்து திருவள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் சார்பாக நிலைய அலுவலர் இளங்கோவன், சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார் மற்றும் விநாயகமூர்த்தி, அன்பரசு ஆகியோர் சார் ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து அலுவலக நுழை வாயிலில் உள்ள பைப்பில் இருப்பதை அறிந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த பாம்பை பிடித்தனர்.

பிடித்த பாம்பை பார்த்ததில் அது 3 வயது குழந்தையை கடித்தது விஷத்தன்மை வாய்ந்த சாரைப் பாம்பு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாம்பை பத்திரமாக காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பு கடித்த சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்து சேர்த்ததால் உயிருக்கு ஆபத்து இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்ததாக தந்தை அஜீத்குமார் தெரிவித்தார்.

அதே போல் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சொசைட்டி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வீட்டு பின்பக்கத்தில் உள்ள தோட்டத்தில் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது தோட்டத்தின் ஓரம் போடப்பட்டிருந்த கம்பி வலையில் சுமார் 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோட்டத்திற்காக போடப்பட்ட கம்பி வேலியில் சிக்கி இருந்த சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு அதனை பத்திரமாக பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.