பதிவு:2022-04-16 07:35:13
பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யக்கோரி 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டம்
: திருவள்ளூர் ஏப் 16 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா என்பவர் மின்சாரம் வீணாவதாக கூறி துண்டித்துள்ளார்.இதனால் குடிநீரின்றி மாணவிள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து காந்தி சிலை அருகில் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆசிரியர்களும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக முடங்கியது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் தலைமை ஆசிரியரியை பணியிடம் மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவியர் கடும் வெயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினை குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கேட்கும் மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும், கடந்த அதிமுகஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியை ஒரு சில மாணவிகளுக்கு வழங்காதது குறித்து கேட்டதற்கு, பெற்றோரை வாங்கி தரச் சொல்லுங்கள் என கேவலமாக பேசுவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாணவிகளின் 2 மணி நேர சாலை மறியலைத் தொடர்ந்து காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாணவிகளை தரக்குறைவாக நடத்தும் தலைமை ஆசிரியர் இருக்கும் இந்த பள்ளியில் பயில்வதற்கு சிரமமாக இருப்பதகாவும் மாணவிகள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது