பதிவு:2022-11-11 11:04:55
திருத்தணி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை
திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூரில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட நிலையில் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நூற்றுக்கு மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் உள்ளனர். வியாழக்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை நடைபெறும் நிலையில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற வந்தவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
17 மருத்துவர்கள் இருக்க வேண்டிய திருத்தணி அரசு மருத்துவமனையில் இன்று இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்ததாலும் மற்றவர்கள் விடுப்பில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக போதிய மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.