பதிவு:2022-11-11 11:52:42
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்; துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் -8, மற்றும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் -44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் - 42 ஆக மொத்தம் 133 மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், 6 குழுக்கள் முறையே முன்னெச்சரிக்கை குழுவில் 9 உறுப்பினர்கள் கொண்ட 1 குழுவும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 12 உறுப்பினர்கள் கொண்ட 6 குழுவும், வெளியேற்றுதல் குழுவில் 31 உறுப்பினர்கள் கொண்ட 3 குழுவும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 27 உறுப்பினர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.மாவட்டத்தில் 4338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 400 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் எளாவூர் -II (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக கால்நடைகளை காப்பாற்ற 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் 74,680 மணல் மூட்டைகள், 4945 சவுக்கு மரக்கம்பங்கள், ஜேசிபி 35, பொக்லைன் இயந்திரங்கள் 43, மின் அறுவை இரம்பங்கள் - 111, கயிறுகள் - 372, படகுகள் -86, அதி நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் - 28, ஜெனரேடர் - 105, தண்ணீர் லாரிகள் -32, நீர் இறைக்கும் பம்புகள் - 106, பீளிச்சிங் பவுடர் - 631.23 மெ.டன், தார்பாய்கள் - 56, டார்ச் லைட்கள் -242, மின்கம்பங்கள் - 1012, மின் மாற்றிகள் - 250 ஆகியவை தயாராக உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் 987.74 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிறுபாலங்கள் 8432 மற்றும் பாலங்கள் 76 சுத்தம் செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில்; உள்ள நீர் வரத்து தங்கு தடையின்றி வெளியேற வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை,ஆரணி ஆறு வடிகால், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன. இதில் 173 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது.அதன்படி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள கொசஸ்தலை 574 ஏரிகளில் 46 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது.அதே போல் ஆரணி ஆறு வடிகால் கட்டுப்பாட்டில் உள்ள 250 ஏரிகளில் 20 ஏரிகள் 100 சதவிகிதம், நிரம்பியுள்ளது.அதே போல் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில் 11 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல் மாவட்டத்தில் உள்ள குளம் மற்றும் குட்டைகள் 3296-ல் 173 மட்டுமே 100 சதவிகிதம் நிரம்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசினால் அறிவிக்கப்படும்; வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகின்றது. மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும், வாட்ஸ் ஆப் எண். 9444317862 ஆகிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.