பதிவு:2022-11-15 17:49:50
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜிம் பயிற்சியாளர் பலி
திருவள்ளூர் நவ 15 : திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சரவணன். இவர் திருவள்ளூரில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று தண்ணீர்குளத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி ட்டிஎன்.20 ட்டி டி 3413 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அதே போல் திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் நாகராஜ் (26). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர் தனது ட்டி என் 20 சிஎம் 6826 என்ற இரு சக்கர வாகனத்தில் காக்களூர் வழியாக ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காக்களூர் தொழிற்பேட்டை அருகே சரவணன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், நாகராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டது.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜிம் பயிற்சியாளர் சரவணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜை ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.