திருப்பாச்சூரில் மாவட்ட அளவிலான 69-வது கூட்டுறவு வார விழாவில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

பதிவு:2022-11-17 23:03:03



திருப்பாச்சூரில் மாவட்ட அளவிலான 69-வது கூட்டுறவு வார விழாவில் 3009 பயனாளிகளுக்கு ரூ.20.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருப்பாச்சூரில் மாவட்ட அளவிலான 69-வது கூட்டுறவு வார விழாவில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் நவ 17 : திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான 69-வது கூட்டுறவு வார விழாவில், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், திருநங்கைகள், ஆதரவற்ற கைம்பெண்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 3009 பயனாளிகளுக்கு ரூ.20.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.

இந்தியாவில் கூட்டுறவு பேரியக்கம் தோன்றுவதற்கு வித்திட்ட நம் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவூர் என்ற கிராமத்தில் தொடங்கப்பட்ட திருவூர் தொடக்க இம்மாவட்டத்தில் மொத்தம் 217 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.இத்தகைய கூட்டுறவு சங்கங்களின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக முதலமைச்சரால் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராமிற்குட்பட்டு வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.101.52 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்து தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 21,927 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகள் என 1,137 நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் என சுமார் 5,89,755 குடும்பதாரர்களுக்கு தலா ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.235.86 கோடி நிதியுதவியும், 5,89,755 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 5,86,615 குடும்பங்கள் பயனடைந்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1,463 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் நிலுவை ரூ.42.51 கோடி தள்ளுபடி செய்வதற்கான தணிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

நேரடி நெல்கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் 2749.72 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மதிப்பு ரூ.5.43 கோடி ஆகும். இதில் 361 விவசாயிகள் பயனடைந்தனர். மேலும், மாவட்டத்தில் செயல்படும் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனாக 2021-2022-ல் ரூ.196.67 கோடியும், 2022-2023-ல் (10.11.2022 முடிய) ரூ.175.61 கோடியும் நகை கடனாக 2021-2022-ல் ரூ.25712.72 இலட்சமும், 2022-2023-ல் ரூ.55737.60 இலட்சமும், டாப்செட்கோ கடனாக 2021-2022-ல் ரூ.182.80 இலட்சமும், 2022-2023-ல் ரூ.203.11 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நம் கூட்டுறவுத்துறை. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக நம் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே ரூ.25 கோடி மதிப்பீட்டில் 3,546 விவசாயிகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், கூட்டுறவுவார விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணவ - மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியர் பரிசாக வழங்கி, பாராட்டினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, இணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.