திருத்தணி முருகன் கோவிலில் தார் சாலை திட்டத்திற்காக அனுமதி அளித்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் கிடப்பில் இருப்பதால் உடனடியாக செயல்படுத்திட பக்தர்கள் கோரிக்கை :

பதிவு:2022-04-16 07:32:46



திருத்தணி முருகன் கோவிலில் தார் சாலை திட்டத்திற்காக அனுமதி அளித்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் கிடப்பில் இருப்பதால் உடனடியாக செயல்படுத்திட பக்தர்கள் கோரிக்கை :

திருத்தணி முருகன் கோவிலில் தார் சாலை திட்டத்திற்காக  அனுமதி அளித்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் கிடப்பில் இருப்பதால் உடனடியாக செயல்படுத்திட பக்தர்கள் கோரிக்கை :

திருவள்ளூர் ஏப் 16 : ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மாதம்தோறும் கிருத்திகை நாட்களிலும் வருடப்பிறப்பை முன்னிட்டு முதல் நாளான டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி படித்திருவிழா,மாசி மாத பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் போன்ற பல்வேறு விசேஷ நாட்களில் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு மேலே ஏறுவதற்கும் கீழே இறங்குவதற்கும் ஒரே தார்சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கடந்த 2018-ல் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து. தார்சாலை அமைக்க கோயில் நிதியில் இருந்து ரூ.9 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நிறைவேற்றிட இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்திற்கு அனுமதிக்காகவும் அரசாணைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் திருத்தணி நெடுஞ்சாலை துறைக்கு ரூ 9.10 கோடிக்கு வைப்பு தொகையை செலுத்தியது. அதனையடுத்து 2019-2020 பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் திருத்தணி முருகன் கோயில் தார் சாலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 மாதங்களாகியும் இதுவரை தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டப்பணிகள் கொண்டுவரப்பட்டதால் இந்த தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே லட்சக்கணக்கான முருக பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப திருத்தணி மலைக்கோவிலில் இருந்து இறங்கி வருவதற்கு புதிய தார்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.