பதிவு:2022-11-23 08:34:05
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 98 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 57 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 40 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 41 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 75 மனுக்களும் என மொத்தம் 311 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடாந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவில் விடுதிகளை நன்முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த விடுதி காப்பாளர்களுக்கு முறையே ரூ.10,000-ம், ரூ.5000-ம், ரூ.3000-ம் என பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், தொழிலாளர் நலத்துறை சார்பாக, தொழிலாளர் நலத்துறை கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற,பதிவு பெறாத தொழிலாளர்களுக்கு ரூ.5 இலட்சம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பணியிடத்தில் விபத்து மரணமடைந்த 2 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.10 இலட்சத்திற்கான ஆணைகளையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பாக, பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் கடனாக 2 பயனாளிகளுக்கு மானியத்தொகையாக ரூ.2,45,725-த்திற்கான காசோலையினையும், மேலும், பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மானியத்தொகை ரூ.80,365 உட்பட ரூ.2,67,882 மதிப்பீட்டிலான பயணியர் ஆட்டோ வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 2019-2020-ம் ஆண்டில் ரூ.3 இலட்சத்திற்கு மேல் கொடி நாள் வசூல் செய்த அரசு அலுவலர்களை பாராட்டும் விதமாக நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் மற்றும் ஊத்துக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் டி.ராஜன் ஆகியோரை பாராட்டி தலைமை செயலாளரால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வழங்கினார்.தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமன சான்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் வருகிற நவம்பர் - 28 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், சார் ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ஜி.ராஜேஷ்வரி, திருவள்ளூர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கமலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி, தாட்கோ மாவட்ட மேலாளர் க.இந்திரா, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் வசந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.