பதிவு:2022-11-23 08:37:58
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள 2 மதுபானக் கடைகளை மாற்றி அமைக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 2 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ரயில் நிலையம் செல்லும் பகுதியில் இந்த கடை அமைந்திருப்பதால் இதனை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இது வரை டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் குடி போதையில் வீட்டு வாசலில் விழுந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் கால்வாயில் விழுந்து விடுகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் திருவள்ளூர் நகராட்சி 26-வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் கிராம மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் பிரதீப்குமார் மற்றும் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி ஆகியோர் நேரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், குடியிருப்பு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து சென்றனர்.