பதிவு:2022-11-24 10:04:09
தீபாவளி பண்டிட் சீட்டு நடத்தி ரூ. 24 கோடி மோசடி வழக்கில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி உரிமையாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 100 க்கும் மேற்பட்டோர் எஸ்பி., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் ஜே.பி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி தீபாவளி பண்டை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தராமல் 24 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான 9 பேர் மீது வழக்கு மாவட்ட குற்றப் பிரிவு போலிசார் பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஜே.பி ஜோதி மற்றும் அவரது மனைவி சரண்யா தந்தை மதுரை தம்பி பிரபாகரன் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி உரிமையாளர் சத்தியமூர்த்தி என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளதை கண்டித்தும், சத்தியமூர்த்திக்கும், ஜே பி ஜோதிக்கும் இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறி சத்தியமூர்த்தி மீது போடப்பட்டுள்ள எஃப் ஐ ஆர்-ஐ ரத்து செய்து மேல் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் போலீசார் முற்றுகையிட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வழக்கில் ஜே.பி. ஜோதி மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவர் மீதும் புகார்கள் வந்துள்ளது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர். திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட எஸ்பி.,அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.