பதிவு:2022-11-24 14:19:59
ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலான 3 துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருவள்ளூர் நவ 24 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, பேரம்பாக்கம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழாவில் பேரம்பாக்கம் உட்பட பட்டரைப்பெரும்புதூர் மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய இடங்களில் தலா ரூ.38 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலான 3 துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 14 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களும், 28 துணை வேளாண் விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன. துணை வேளாண் விரிவாக்க மையங்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும் பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு ரூ.38 இலட்சம் வீதம் 8 துணை வேளாண் விரிவாக்க மையங்களின் புதிய கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் வெள்ளவேடு, சின்னநாகப்பூண்டி, பாதிரிவேடு, பொன்னேரி மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய 5 இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.அதன் தொடர்ச்சியாக, இன்று கடம்பத்தூர் வட்டாரத்தில் பேரம்பாக்கம் துணை வேளாண் விரிவாக்க மையமும் பட்டரைபெரும்புதூர், கனகம்மாசத்திரம் ஆகிய துணை வேளாண் விரிவாக்க மையங்களையும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இரண்டாவது கட்டமாக வைக்கப்பட்டது.
துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டுக் காரணிகள் முதலியவை விவசாய பெருமக்களுக்கு தேவையான அளவில் பாதுகாப்பாக இருப்பு வைத்து தடையின்றி விநியோகம் செய்ய மிகவும் வசதியாக இருக்கும். இதனால் சுமார் 30,000 விவசாயிகள் பயனடைவார்கள்.மேலும், இருபோக சாகுபடி நிலங்களை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக 14 விவசாயிகளுக்கு தலா 2 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளும், ஒரு விவசாயிக்கு ரூ.8,820 மதிப்பீட்டிலான விசைத் தெளிப்பான்களும், 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டையும், 5 விவசாயிளுக்கு நெல் விதைகளும், தோட்டக்கலைத் துறை சார்பாக ரூ.80,500 மதிப்பீட்டில் 15 விவசாயிகளுக்கு மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், அங்கக உரங்கள், வெண்டைக்காய் விதைகள், தர்ப்பூசணி விதைகள் மற்றும் செவ்வந்தி குழித்தட்டு நாற்றுகள் ஆகிய இடுபொருட்களும் என மொத்தம் 40 விவசாயிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் வழங்கினார்.
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.சமுத்திரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.