கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலம் சேதம் பொது மக்கள் அவதி

பதிவு:2022-11-24 14:43:23



சத்தரை அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலை : இருபுறமும் வேலி அமைத்து முற்றிலும் போக்குவரத்துக்கு தடை : பொது மக்கள் அவதி

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலம் சேதம் பொது மக்கள் அவதி

திருவள்ளூர் நவ 24 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது சத்தரை ஊராட்சி.இந்த ஊராட்சியில் உள்ள சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரை பாலம் உள்ளது.இந்த பாலத்தை பயன்படுத்தி கடம்பத்தூரிலிருந்து கொண்டஞ்சேரி, கீழச்சேரி, கொட்டையூர், கூவம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தரை பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் ரூ.4.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்நிலையில் தற்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டு நிரம்பிய நிலையில் கூவம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த உபரி நீர் திறப்பினால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீண்டும் தரைப்பாலம் சேதமடைந்தது.இந்நிலையில் கூவம் ஆற்றின் தரைப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதித்தனர்

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழையால் தரை பாலம் அதிகளவில் சேதமடைந்தது. எந்நேரத்திலும் தரை பாலம் அடித்து செல்லும் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் அந்த தரைப்பாலத்தின் இரு புறமும் வேலி அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.

இதனால் சத்தரையில் இருந்து கடம்பத்தூரிலிருந்து கொண்டஞ்சேரி, கீழச்சேரி, கொட்டையூர், கூவம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்பவர்கள் கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.