பதிவு:2022-11-24 14:45:54
திருத்தணி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது : 5 இருசக்கர வாகனங்களில் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல்
திருவள்ளூர் நவ 24 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரில் சில மாதங்களாக வீடுகள், கடைகள், கோவில் வளாகங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்கள் முன்பு திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் திருத்தணியைச் சேர்ந்த சதிஷ் என்பவரின் இரு சக்கர வாகனமும் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
இதையடுத்து திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பதிவான காட்சிகள் உதவியுடன் இரு சக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் தேடி வந்தனர்.மேலும் மாவட்ட எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.
திருத்தணி சரஸ்வதி நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்றும், அந்த வாகனத்தில் வந்தவர் திருத்தணி தாலுக்கா ஆற்காடுகுப்பம் காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்த சத்தியராஜ் என்றும் தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சத்தியராஜ் ஐந்து இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்து, சத்தியராஜ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.