பதிவு:2022-11-25 10:55:08
திருநின்றவூரில் உள்ள ஏஞ்சல் பள்ளி நிர்வாகி வினோத் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது: திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பு
திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரில் உள்ள ஏஞ்சல் பள்ளியில் தாளாளர் வினோத் என்பவர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் தொடர் போராட்டம் காரணமாக தாளாளர் வினோத் மீது பாலியல் சீண்டலில் ஈடுப்படதாக 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து தனிப்படை போலீசார் வினோத் ஜெயராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் பாலியல் சீண்டலில் தனக்கு தொடர்பில்லாத மாதிரியும், வேண்டுமென்றே பள்ளியில் பணிபுரியும் ஒருசிலரால் தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் வீடியோ ஒன்றை வினோத் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலானது. அதனையடுத்து தனிப்படை போலீசார் கோவாவில் பதுங்கியிருந்த வினோத்தை கைது செய்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் வினோத்தை திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா தேவி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெ.பவித்ரா முன்னிலையில் ஏஞ்சல் பள்ளி மாணவிகள் 3 பேர் இன்று பெற்றோருடன் வந்து வாக்குமூலம் அளித்தனர். வாக்குமூலம் அளிக்கும் போது மாணவிகளின் பெற்றோரும் உடனிருந்தனர். ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக அழைத்து வீடியோ காட்சிகளுடன் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.