பதிவு:2022-11-25 10:53:33
திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டையில் போலீஸ் ஸ்டேஷனின் போலியான ரப்பர் ஸ்டாப் மூலம் தடையில்லா சான்றிதழ் பெற்று ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ததாக கொடுத்த புகாரில் மூன்று பேர் கைது
திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை பகுதியை சேர்ந்தவர் அனுமந்த் சிங். இவரது மனைவி இந்திராணி பாய். இவர்களுக்கு சுபாஷ் ஜெய் சிங் என்ற மகனும், பவானி பாய் உள்ளிட்ட மூன்று மகள்களும் உள்ளனர். இந்த தம்பதியினருக்கு 7.75 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்நிலையில் தனது மூன்று மகள்களுக்கும் தலா ஒரு ஏக்கர் நிலமும் மனைவி பெயரில் ஒரு ஏக்கர் நிலமும் மகன் சுபாஷ் ஜெயசிங் பேரில் 2 ஏக்கர் நிலமும் என 6 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 7.75 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய மகன் சுபாஷ் ஜெய் சிங் மீது அதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மொத்தம் உள்ள 6 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் 203 பிளாட்டுகளாக போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்து அதில் வந்த பணத்தை சரி சமமாக பிரித்துக் கொண்டனர். இந்நிலையில் சுபாஷ் ஜெயசங்கிற்கும் அக்கா பவானி பாயின் கணவர் ரூப் சிங்கிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரம் காணவில்லை என சுபாஷ் ஜெயசிங்கின் அக்கா கணவர் ரூப் சிங் என்பவர் போலியான ஆவணத்தை தயாரித்து, அதை ரூப் சிங் இன் சகோதரர் சங்கர் சிங்கிடம் கொடுத்து ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சங்கர் சிங் மற்றும் அம்மையார் குப்பத்தை சேர்ந்த நிலத்தரகர் சரவணன் ஆகியோர் கிராம உதவியாளர் தனசேகரை அணுகியுள்ளனர்.
அப்போது தனசேகர் ஆர்கே பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போலியான ரப்பர் ஸ்டாம்ப்பை தயார் செய்து அந்த ஆவணத்தில் போலியான போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாம்ப்பை முத்திரையிட்டு தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர். அதனையடுத்து கடந்த 17.10.2022 அன்று சிங்கப்பூரிலிருந்து வந்த பவானி பாய் மற்றும் ரூப் சிங் ஆகியோர் 2.75 ஏக்கர் நிலத்தை 49 பிளாட்டுகளாக போட்டு அதனை அக்கா பவானி பாய் பெயரில் பதிவு செய்து உள்ளனர். இந் நிலையில் சுபாஷ் ஜெய் சிங் பிளாட்டுகளை விற்பனை செய்வதற்காக சென்று பார்த்தபோது அந்த பிளாட்டுகள் தனது சகோதரி பெயரில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 2.75 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணம் மூலமும் அதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க போலியான போலீஸ் ஸ்டேஷனில் ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்தி இவர்கள் பெயரில் மாற்றம் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ரூப் சிங்கின் சகோதரர் சங்கர் சிங் மற்றும் நிலத்தரகர் சரவணன் கிராம உதவியாளர் தனசேகர் ஆகிய மூன்று பேரையும் ஆர்.கே. பேட்டை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர் மேலும் சிங்கப்பூரில் உள்ள முக்கிய குற்றவாளியான சுபாஷ்ஜெய சிங்கின் சகோதரியின் கணவர் ரூப்சிங் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் கிராம உதவியாளர் தனசேகரிடமிருந்து அனைத்து துறை அதிகாரிகள் அலுவலகங்கள் ஆகியோரின் ஸ்டாம்புகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.