தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாமூல் கேட்டு திமுக ஒன்றிய பொருளாளர் தொடர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

பதிவு:2022-11-25 10:12:30



திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாமூல் கேட்டு திமுக ஒன்றிய பொருளாளர் தொடர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாமூல் கேட்டு திமுக ஒன்றிய பொருளாளர் தொடர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம்,கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 2010 முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 450 பேர் பணியாற்றி வருகின்றனர், தினமும் இந் நிறுவனத்திலிருந்து பொருட்களை எடுத்து செல்லவும் , பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் சுமார் 50 வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நிறுவனத்திற்கு செல்லும் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை இருந்தது.

இது குறித்து விசாரித்த போது கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவரின் மகனும் கடம்பத்தூர் ஒன்றிய திமுக ஒன்றிய பொருளாளருமான தேவா என்பவரின் தூண்டுதலினாலும் வற்புறுத்தளாலும் மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தோண்டி, பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் தெரியவந்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்திக்கு செல்லும் பாதையை சேதம் செய்து தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தொழிற்சாலை மேலாளர் பிரபு சார்பில் மப்பேடு போலிசில் புகார் அளித்தனர்.

மேலும் ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் ஸ்ரீ சாய் என்டர்பிரைசஸ் -எனும் நிறுவனத்தை மிரட்டியது தொடர்பாகவும் ஒரு புகார் கொடுக்கப்பட்டு அதுவும் நிலுவையில் இருந்தது. தொழிற்சாலை நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அவ்வப்போது எங்கள் நிறுவனத்திற்கு வந்து எனக்கு மாமூல் கொடுக்க வேண்டும், அல்லது எனக்கு பணி அனுமதி (ஒர்க் ஆர்டர் ) கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் பல்வேறு தொல்லைகள் செய்வேன் என்றும் எனக்கு பணம் தராவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாதம் எனக்கு பத்து லட்சம் பணம் வேண்டும். இல்லையேல் உங்களை நிம்மதியாக தொழில் நடத்த விடமாட்டேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இதனால் கீழச்சேரி ஊராட்சி மன்றத் தலவைரின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமான தேவாவை கைது செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் திமுக ஒன்றிய பொருளாளர் தேவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.