மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி :

பதிவு:2022-11-27 19:59:26



மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி :

மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி :

திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சிபாஸ் கல்யாண் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி., விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி., மகாபாரதி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிரான மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவது குறித்தும் மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர். மேலும் மாணவ மாணவிகள் தங்களது பேச்சு மற்றும் நடிப்பு வடிவிலான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி.க்கு நேரடியாக புகார் அளிக்க 9444005105 என்ற வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் எண்ணை வெளியிட்டனர். பின்னர் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியையும் மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் சொல்ல மாணவ மாணவிகள் திரும்ப சொல்லி உறுதி மொழியேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க அனைத்து துறைகள் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையானவர்களை மாற்றும் வகையிலான போதை பொருள் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் துறை சிறப்பாக செயலாற்றி இருக்கிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா கடத்தல் வழக்கில் 187 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடியே 51 லட்சம் மதிப்பிலான 1894 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். மேலும், பள்ளி அருகில் போதை தரக்கூடிய கூல் லிப் எனப்படும் போதை பொருள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும், அதனை ஆய்வு செய்ய எஸ்.பி., தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசும் போது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் இது குறித்து பேச அச்சப்படுகின்றனர்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக தொடர்பு கொண்டு எந்த மாதிரியான உதவி தேவை என தெரிவிக்கலாம். கவுன்சிலிங் தேவைப்பட்டாலோ அல்லது வீட்டில் கஞ்சாவால் பிரச்னை ஏற்பட்டாலோ தற்போது அறிவித்துள்ள 9444005105 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே நேரத்தில் போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது. யாரிடமிருந்து வருகிறது போன்ற தகவல்களையும் இந்த எண்ணில் தெரிவிக்கலாம். புகார் தருபவரின் ரகசியம் காக்கப்படும். மேலும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் மைனராக இருந்து அவர்களை சிறையில் அடைக்கும் போது அவர்களின் மனநிலை மாறி வேறு தவறு செய்ய தூண்டும். அதனால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். மேஜராக இருந்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சாவை ஒழிக்க மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருவதால் அடுத்த 3 மாதங்களில் தமிழகத்திலேயே கஞ்சா இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தை மாற்றப் போவதாக எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.