பதிவு:2022-11-27 20:02:37
திருவள்ளூரில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் :
திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் நடைபெற்றது.திஷா குழு தலைவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரும் திஷா குழு உறுப்பினர் செயலருமான ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து, அவை சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதையும், அவை சரியாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பதற்காக இயங்குகின்ற ஒரு குழுவாக திஷா குழு செயல்படுகிறது என்பதையும்,மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை துறை சார்பாக உற்பத்தி திறன் அதிகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தின் நீடிக்கச் செய்தல் நோக்கமாக கொண்ட திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டைகளை வழங்குவது மற்றும் மண்வள அட்டையின்படி, உர பரிந்துரை செய்து ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல் நோக்கமாக கொண்ட தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், நுண்ணீர் பாசன பரப்பினை அதிகப்படுத்தி நீரினை சிக்கனமாக பயன்படுத்துதல் நோக்கமாக கொண்ட பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்,
மேலும், சமூக நலத்துறை சார்பாக பெண் குழந்தைகளின் உயிர் வாழ்தலையும், பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு செய்தல் நோக்கமாக கொண்ட பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் சார்பாhக செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம், அம்ரூத் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக மக்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்தாலோசனை மேற்கொண்டு, மேற்கண்ட அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகளில் எவ்வித சுணக்கிமுமின்றி செயல்படவும், தொய்வு ஏற்பட்டுள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும், மேலும், திஷா குழு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழுமையாக பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி) எஸ்.சுதர்சனம் (மாதவரம்), கணபதி (மதுரவாயல்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன்,உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கேத்ரின் சரண்யா,மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மீனாட்சி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.