பதிவு:2022-11-28 13:55:16
திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாகச் செல்லும் ரயில்கள் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
திருவள்ளூர், பெரியகுப்பம், ஈக்காடு புல்லரம்பாக்கம் திருப்பாச்சூர் கனகம்மா சத்திரம் வேப்பம்பட்டு அரண்வாயல்குப்பம், மணவாளநகர், ஊத்துக்கோட்டை திருத்தணி கும்மிடிப்பூண்டி பொன்னேரி என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே காணப்பட்ட கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் இருக்கும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி மெதுவாக சென்றனர்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரயில்கள் மெதுவாக சென்றன. இதனால் திருத்தணி சென்னை மார்க்கத்தில் இரு புறமும் செல்லும் பயணிகள் ரயில் தாமதமாக செல்கின்றன. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அதிவேக வந்தே பாரத் ரயிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக சென்றது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என தெரியாமல் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் போதே சென்று ரயில் ஏற வேண்டிய நிலையும் உள்ளது. கடந்த ஒரு வாரமாக அதிகாலை முதல் 8 மணி வரை பனிமூட்டம் அதிகளவில் இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.