பதிவு:2022-11-28 14:02:37
திருவள்ளூரில் 195 இருளர் பழங்குடிஇன மக்களுக்கு ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட செம்பேடு, ஆர்க்கம்பட்டு, வெள்ளியூர், சத்தரை வெண்மனம் புதூர், பேரம்பாக்கம் மற்றும் கொண்டஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 195 இருளர் பழங்குடிஇன மக்களுக்கு ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.
சாதாரண மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 17 பயனாளிகளுக்கு ரூ.19,66,560 மதிப்பீட்டிலும், ஆர்க்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.34,70,400 மதிப்பீட்டிலும், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு ரூ.18,50,880 மதிப்பீட்டிலும், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தைச் சேர்ந்த 69 பயனாளிகளுக்கு ரூ.79,76,400 மதிப்பீட்டிலும், வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 31 பயனாளிகளுக்கு ரூ.35,83,600 மதிப்பீட்டிலும், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.27,74,400 மதிப்பீட்டிலும், கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு ரூ.10,40,400 மதிப்பீட்டிலும் என 195 பயனாளிகளுக்கு ரூ.2,26,62,640 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே மாவட்டத்தில் ஏறக்குறைய 1000-ம் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, அவற்றில் 500 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு மேல்நடவடிக்கைகாக அரசிடம் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதுபோன்று, தற்பொழுது வழங்கப்படும் 195 பயனாளிகளுக்கும் வீடு கட்டி கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி.கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், திருவள்ளூர் சரக துணை பதிவாளர்கள் காத்தவராயன், இரா.ரவி, திருவள்ளுர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.