பதிவு:2022-11-29 11:52:43
திருவள்ளூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் பயனாளிகள் 13 வது தவணைத் தொகை பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் நவ 29 : தமிழ்நாட்டில் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுநாள் வரை 12 தவணைகளில் ரூ.184.92 கோடி உதவித்தொகை தகுதியுள்ள பயனாளிகளின் வங்கி கணக்கில் ஒன்றிய அரசினால் வரவு வைக்கப்பட்டுள்ளது.தற்போது ஒன்றிய அரசினால் இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெறுவதற்கு பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண் உறுதி அவசியம் என உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 2022 முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான 13-வது தவணைத் தொகையினை பெறுவதற்கு,திருவள்ளூர் மாவட்டத்தில் இதுநாள் வரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC உறுதி செய்யாத தகுதியுள்ள, பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் கட்டாயம் தங்களது ஆதார் எண்ணை 30.11.2022 க்குள் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.
வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை களப்பணியாளர்களுக்கு அதற்கான இலக்கீடுகளும் வழங்கி பி.எம்.கிசான் பயனாளிகளிக்கு தெரிவித்து 30.11.2022-க்குள் பணி முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.எனவே பி.எம்.கிசான் பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகாமையிலுள்ள பொதுசேவை மையம் அல்லது தபால் நிலையம் ஆகியவற்றிற்கு சென்று தங்களது பெயர், கைபேசி எண் மற்றும் ஆதார் எண் வழங்கி பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்து தரக் கோருமாறு தெரிவித்துள்ளார்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட தவணைத் தொகை பெறும் தகுதியுள்ள பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், அந்த பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்தும் (அல்லது) பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் கைவிரல் ரேகையை பதித்தும் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யலாம் எனவும், தங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் நேரடியாகவும், ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு இம்மாதம் இறுதிக்குள் விடுபபட்ட அனைத்து பயனாளிகளும் கட்டாயம் e-KYC உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.