பதிவு:2022-11-30 21:03:51
திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் : திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் 3 பிரிவுகளாக 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார்.
:
இப்போட்டிகள் மூலம் மாணவர்களிடையே கலை வடிவங்கள் குறித்து விழிப்புணர்வும், ஊக்கமும் தரும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8ம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 9 மற்றும் 10 ம் வகுப்பு வரை இரண்டாம் பிரிவாகவும், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பிரிவாகவும் நடத்தப்படுகிறது.
:
பள்ளி அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் வெற்றிபெறும் மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் வெற்றிப்பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதலிடம் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் கலந்துக் கொள்ள தகுதி பெறுவர்.
:
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார். அதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இந்த போட்டி நடைபெற்றது.
:
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டி 6 முதல் 8 ம் வகுப்பு வரை முதல் பிரிவாக நடைபெற்றது.போட்டிகளை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா முன்னிலை வகித்தார்.
:
இந்த வட்டார அளவில் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேர், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேர்,மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேர் என மொத்தம் 29 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
:
அதனைத் தொடர்ந்து உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 40 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், பெற்றோர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர் பங்கேற்றனர்.
:
இதில் திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சே.ஆ.தாமோதரன்,திருப்பாச்சூர் துணை தலைவர் வசந்தகுமார்,வட்டார கல்வி அலுவலர்கள் ஹே.ஆனி பெர்டீஷியா பொற்கொடி,கோ.பூவரகமூர்த்தி, மேற்பார்வையாளர் சிவலிங்கம்,தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சி புனிதவதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
: