கால்நடை மருத்துவமனைகளுக்கு 2 தவணையாக ரூ. 69 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைப்பு

பதிவு:2022-12-01 15:57:39



கால்நடை மருத்துவமனைகளுக்கு 2 தவணையாக ரூ. 69 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைப்பு

கால்நடை மருத்துவமனைகளுக்கு 2 தவணையாக ரூ. 69 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைப்பு

திருவள்ளூர் டிச 01 : மனித மருத்துவத்திற்கு இணங்க கால்நடைக்கும் மருத்துவம் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையின் அடிப்படைியில் இந்த ஆண்டு சுமார் 69 லட்சம் மதிப்பிலான மருந்துகளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு மருந்துகளை வழங்கியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பராமரித்து வருகிறது. அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும், மருந்து இருப்பை அதிகரித்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதள், கிராமத்திற்கு சென்று கால்நடை மருத்துவ முகாம்கள், மற்றும் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தி்ல் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப மருந்துகளை அனுப்பி வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 5 கால்நடை மருத்துவமனைகள், 87 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2.85 லட்சம் பசுக்கள், 45 ஆயிரம் எருமைகள், 2 லட்சத்து 42 ஆயிரம் வெள்ளாடுகள், 63 ஆயிரம் செம்மறி ஆடுகள் என 6 லட்சத்து 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடை மருந்தகங்களுக்கு கால்நடைகளுக்கான மருந்துகள், வெறிநாய் கடிக்கான ஊசி மருந்துகள் அனைத்தையும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் பேரில் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.32 லட்சம் மதிப்பிலான மருந்துகள் பெறப்பட்டு பிரித்து வழங்கப்பட்டது.

தற்போதைய நிலையில் இரண்டாம் கட்டமாக அனுப்பி வைத்த ரூ.37 லட்சம் மதிப்பிலான மருந்துகள் வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி கால்நடை இயக்குநர் பாஸ்கரன் ஆகியோரின் மேற்பார்வையில் கால்நடைகளுக்கான மருந்துகளை தரவாரியாக பிரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை நிலையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.