பதிவு:2022-12-01 18:00:12
மாடு மேய்க்க சென்ற 17 வயது சிறுமியிடம் 5 இளைஞர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் தீக்குளித்த சிறுமி : தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தனது வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்க உள்ளதாக முகநூலில் வீடியோ பதிவு
திருவள்ளூர் டிச 01 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் பகுதியில் தாய் தந்தையை இழந்த 17 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி அப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதை அவர்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து அவர்களது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சிறுமி மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச் சிறுமி 24-ந் தேதி காலையில் தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அச்சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள சிறுமி தாய் தந்தை இல்லாததால் வாழ்வாதாரத்திற்கு வழியில்லை எனவும் தனது சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தமிழக முதல்வருக்கும் மாவட்ட காவல் எஸ்பி-க்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் தாய் தந்தை இல்லாமல் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாகவும் தனது வாழ்வாதாரத்திற்கு தனக்கு நடந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட எஸ்பி,. ஆகியோரை நேரில் சந்திக்க வேண்டுமென வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது இதேபோன்று இந்த வீடியோ அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.