பதிவு:2022-12-02 16:41:16
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவர் மீது சந்தேகம் என பெண்ணின் தாய் புகார் :
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு( 27) இவர் அம்பத்துாரில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறரார். இவர் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவரது மகள் பிரகதி ( 24) யை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணவர் மனைவி இருவரும் தனித்தனியாக படுத்து தூங்கியுள்ளனர்.இந்நிலையில் டில்லிபாபு நேற்று காலை எழுந்து பார்த்த போது மனைவி பிரகதி வீட்டின் முதல் தளத்தில் உள்ள சிமெண்ட் ஷீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மனைவி பிரகதியின் தாய் சுமதிக்கு டில்லிபாபு கொடுத்த தகவலின் பேரில் மணவாளநகரில் இருந்து கடம்பத்தூருக்கு விரைந்து வந்த பார்த்த போது, பெண்ணை நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய் சுமதி, சாவில் சந்தேகம் இருப்பதாக கடம்பத்துார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரகதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகம் மரணம் என இளம் பெண்ணின் தாய் கொடுத்த புகாரையடுத்து கணவர் டில்லிபாபுவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.