பதிவு:2022-12-02 16:49:33
திருவள்ளூரில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பாக உருவாக்கப்பட்ட நடமாடும் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார் :
திருவள்ளூர் டிச 02 : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கடந்த 67 வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் அதை தடுக்கும் பணியினை செய்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 1-ந்தேதி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும், அதை தடுக்கும் முறையை குறித்தும் மக்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டி கலைநுட்பத்துடன் அதன் அறிகுறிகளை தகுந்த படத்துடன் ஒரு பேருந்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கியது. அதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைத்து, நடைபெற்று கொண்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கலை நுட்பத்துடனும் புற்றுநோய் அறிகுறிகளை எளிதில் விளக்கும் வகையிலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பாக உருவாக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகை புரிந்துள்ள நடமாடும் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
இதன் காரணமாக பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காணும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இப்பேருந்து செல்ல இருப்பதால், தங்கள் கிராமத்தின் வழியாக இந்த விழிப்புணர்வு பேருந்து வர இருப்பதால் மற்றும் தங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்ரி சுப்பிரமணி, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணை இயக்குநர் சுவாமிநாதன், பேராசிரியர் சுரேந்திரன், துறை தலைவர் விஐய் சீனிவாசன் மேலாளர் தனசேகரன், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.