பதிவு:2022-12-03 21:02:53
திருவள்ளூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் டிச 03 : விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப் பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2022-23ம் நடப்பு ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளன.இதன்படி, அதிபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 இலட்சமும், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற் கலப்பைகளுக்கு ரூ.45 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிக்கு ரூ.30 ஆயிரம், விசைத்தெளிப்பான் ரூ.4 ஆயிரம் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியின வகுப்பினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2022-23ம் ஆண்டில் வழங்கப்படுகின்றது.
இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 8 எண்கள் டிராக்டர், 1 எண் புதர் வெட்டும் கருவி, 3 எண்கள் ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற் கலப்பைகள், 3 எண்கள் நெல் அறுவடை இயந்திரங்கள், 2 எண்கள் விசையால் களையெடுக்கும் கருவிகள், 10 எண்கள் பவர் டில்லர்கள், 1 எண் விசைத்தெளிப்பான், 1 எண் கரும்பு சோகை உரிக்கும் கருவி, நடப்பாண்டில் ரூ.72.78 இலட்சம் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்துறை, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி உபகோட்ட அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.