பதிவு:2022-12-03 21:29:49
காதல் திருமணம் செய்த கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் உயர்மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரியாஸ் தனது மனைவியுடன் வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து மனமுடைந்த ரியாஸ் திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள புறா கோவில் அருகே செல்லும் உயர்மின்அழுத்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.
பின், அங்கிருந்து தனது மொபைல் போன் மூலம் செல்பி எடுத்து தனது மனைவியின் மொபைல் போனுக்கு அனுப்பினார். இதை பார்த்து பிரியா, போலீசார் மற்றும் கணவன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து ரியாஸின் பெற்றோர் மற்றும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின், ரியாஸ்சை உயர்மின்அழுத்த கோபுரத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
முதற்கட்ட போலீஸ் விசாரணையில், ரியாஸ் மீது மனைவி பிரியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்குமிடையே தகராறு நடந்ததாகவும், பின் ரியாஸ் மதுபோதையில் மின்கோபுரத்தில் ஏறி செல்பி எடுத்து அனுப்பி மனைவியை மிரட்டுவதற்காக உயர்மின்அழுத்த கோபுரத்தில் ஏறியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் போலீசார் போதிய அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.