பதிவு:2022-12-03 21:32:16
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.
.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் வரவு, செலவினங்கள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரியாங்குப்பம், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், ராமன்கோவில், தண்டலம், வயலுார், திருப்பந்தியூர், நுங்கம்பாக்கம், மப்பேடு, தொடுகாடு, மேல்நல்லாத்துார், இருளஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தங்கள் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கே.திராவிடபக்தன், நா.வெங்கடேசன், பா.யோகநாதன், ஆர்.கார்த்திகேயன், வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், பா.சுமதி, வி.கோவிந்தம்மாள் உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.