பதிவு:2022-12-06 13:33:51
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் அருகே திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய முயற்சி செய்த கணவனை தட்டிக் கேட்ட மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கியதாக திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த புதுப்பனம்பாக்கம் கிரைமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (36). இவரது கணவர் குமார் (44). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆன நாளிலிருந்து பிரசன்னகுமாரியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு வருடமாக ஆண் வாரிசு இல்லாததால் 2-வது திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரசன்னகுமாரியை கணவர் குமார் மற்றும் அவரது தம்பி மோகன், மாமியார் வெங்கடம்மாள், மாமனார் செங்கையா ஆகியோரும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரசன்னகுமாரி, திருவாலங்காடு காவல் நிலையம், மாவட்ட எஸ்பி., அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தார் துன்புறுத்துவதாக புகார் கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதமும் பிரசன்னகுமாரியை தாக்கி கத்தியால் வெட்டியதால் பலத்த காயம் அடைந்த பிரசன்னகுமாரி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இது குறித்தும் பிரசன்னகுமாரி திருவலாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அவர் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பிரசன்னகுமாரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
திருமணம் ஆன நாளிலிருந்து வரதட்சனை கேட்டு கொடுமைத்ப்படுத்தி வந்தார். தற்போது ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய நினைக்கும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் பிரசன்னகுமாரியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.