பதிவு:2022-12-06 13:40:08
புன்னப்பாக்கம் கிராமத்தில் உலக மண் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த விழிப்புணர்வு : வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுரேஷ் பங்கேற்பு
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் உலக மண் தினவிழாவையொட்டி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுரேஷ் பங்கேற்று பேசினார். அப்போது உலக மண் தினத்தையொட்டி மண்வளம் குறித்தும், விவசாய சாகுபடிக்கு மண்வளம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம்.
இதன் பேரில் கிராமங்களில் ஒவ்வொரு விவசாயியின் விளைநிலங்களில் மண்வளம் பரிசோதனை செய்து மண்வள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதில் பயிர் சுழற்சி, உயிர் உரங்கள், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் அறிந்து பரிந்துரைத்த உரங்களை இட வேண்டும். இதன் மூலம் உற்பத்தி செலவு குறைவதோடு, மகசூல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் விளக்கமாக எடுத்துரைத்தார். அதையடுத்து அந்தக் கிராம விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் மண் பரிசோதனை வாகனத்தில் அமைத்துள்ள ஆய்வகம் செயல்முறைகள், செம்மண், அமில மண், மணல், மணல்கள் கலந்த குறுமண், உவர் மண் மற்றும் சுண்ணாம்பு மண் போன்ற மண் வகைகள் கண்காட்சியில் இடந் பெற்றிருந்ததை விவசாயிகள் பார்வையிட்டனர். அதையயடுத்து மண் சேகரித்தல், முக்கியத்துவம் மற்றும் அனைத்து துறை செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனையும் விவசாயிகளுக்கு வழங்கினர். அங்குள்ள விவசாய நிலத்தில் மண்மாதிரி எடுக்கும் முறை, செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வரி, விதை சான்று துறை உதவி இயக்குநர் ஜீவராணி, வேளாண் துணை இயக்குநர்(மாநில திட்டம்) அனிதா, வேளாண்மை உதவி இயக்குநர்(விதைச் சான்று) கவிதா, திருவூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அருள்பிரசாத், கால்நடை உதவி இயக்குநர் பாஸ்கர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.