பதிவு:2022-12-09 07:51:28
திருவள்ளூரில் முப்படை கொடிநாள் அனுசரிப்பு நிகழ்வில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3.70 இலட்சம் மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் டிச 08 : நமது தாய்த்திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. முப்படை வீரர்களின் குடும்ப நலன்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு துறை வாயிலாக கொடிநாள் மூலம் வசூல் செய்யப்படும் தொகையைக் கொண்டு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2021-ம் ஆண்டிற்கு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.4,01,85,000 நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.4,89,54,000 வசூல் செய்யப்பட்டு அரசிற்கு செலுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்கு அளிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் அதிகமாக கொடிநாள் நிதி வசூல் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து கொடுத்துள்ளனர்.மேலும், 2022-ம் ஆண்டிற்கு கொடிநாள் இலக்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.4,24,49,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளூர் மாவட்டம் கொடிநாள் வசூலில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக முப்படை கொடிநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 17 பயனாளிகளுக்கு ரூ.3.70 இலட்சம் மதி;ப்பீட்டிலான கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடிகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் மற்றும் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப் ஆகியோர் வழங்கினர்.
இதில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ஜி.ராஜேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, ஏர் காமேன்டர் (ஓய்வு) எஸ்.நாராயணன், விங்க் காமேன்டர் (ஓய்வு) கே.பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.